ரூ.2.22 கோடி மதிப்பு நரிக்குறவர் குடியிருப்புகளை அமைச்சர் திறந்து வைப்பு
ஆரூர்பட்டி ஊராட்சியில் இன்று (16.12.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், வெள்ளக்கல்பட்டி நரிக்குறவர் குடியிருப்பில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 48 வீடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஆரூர்பட்டி ஊராட்சியில் இன்று (16.12.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், வெள்ளக்கல்பட்டி நரிக்குறவர் குடியிருப்பில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 48 வீடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பேசியதாவது:
கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர், ஒன்றிய அரசின் துணையோடு ஒவ்வொரு ஊராட்சியிலும் வீடுகள் கட்டித்தரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மீண்டும் கலைஞர் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பு ஓடுகள் போட்டு கட்டப்பட்ட வீடுகளை ஒட்டு வீடுகளாக மாற்றித் தந்தார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் மட்டுமின்றி நரிக்குறவர் மக்களுக்கும் முக்கியத்துவம் அளித்து முதல்வர் சிறப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு, அவர்களது வீட்டிற்கு நேரடியாகச் சென்று உணவு அருந்தி பெருமை சேர்த்துக் கொடுத்தார்கள். மேலும், தற்போது முதல்வர் ஒட்டு வீடுகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைத்து வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக்கூடம், நியாய விலைக் கடை, பாலமலையில் 17 கி.மீ நீளத்திற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணி போன்ற பல்வேறு திட்டங்கள் தங்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஆரூர்பட்டி ஊராட்சியில் வெள்ளக்கல்பட்டி நரிக்குறவர் குடியிருப்பில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் 48 வீடுகள் புதியதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்படும். இதனை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. இராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல் மங்கை, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu