கரியகோவில் நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பும் பணியை அமைச்சர் துவக்கிவைப்பு
கைக்கான்வளவு காட்டாற்றின் உபரி நீரை கரியகோவில் நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பும் முடிவுற்ற பணியினை இன்று (21.11.2022) அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், சின்னகல்ராயன் தெற்குநாடு, கைக்கான்வளவு காட்டாற்றின் உபரி நீரை கரியகோவில் நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பும் முடிவுற்ற பணியினை இன்று (21.11.2022) அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
பின்னர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்ச கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், சின்னகல்ராயன் மலைத்தொடரில் தெற்குநாடு கிராமத்தில் கைக்கான்வளவு என்னும் இடத்தில் காட்டாற்றின் குறுக்கே ரூ.7.30 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைத்து காட்டாற்றில் அதிக மழைப்பொழிவால் பெறும் கூடுதல் நீரை கரியகோயில் நீர்தேக்கத்திற்கு திருப்பும் பணிக்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளது.
இப்பகுதி விவசாயிகள் 30 ஆண்டுகாலமாக கேட்டுக்கொண்டிருந்த இத்திட்டம், இப்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் காட்டாற்றின் குறுக்கே 30 மீட்டர் நீளத்திற்கு தடுப்பணை, தலைப்பு மதகு அமைத்து கரியகோயில் வரத்து வாய்க்காலில் நீர் கொண்டு செல்ல ஏதுவாக 4 எண்ணிக்கையிலான வீழ்ச்சிகள் மற்றும் 2 எண்ணிக்கையிலான கிணறு வீழ்ச்சிகள் ஆகியவற்றை கட்டமைத்து நீர்த்தேக்கத்திற்கு கூடுதல் நீர் வழங்கும் கட்டுமானப்பணி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தற்போது பணி நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தடுப்பணையில் இருந்து மதகின் வழியாக 50 கன அடி பாசன நீர் திறக்கப்பட்டு கரியகோவில் வரத்து வாய்க்காலில் விடப்படுகிறது. இந்த வரத்து வாய்க்காலின் வாயிலாக கரியகோயில் அணைக்கு கூடுதலாக நாள் ஒன்றுக்கு 4.3 மில்லியன் கன அடி நீர் வழங்கப்படும். கரியகோயில் நீர்தேக்கத்தின் புதிய வரத்து வாய்க்காலில் கூடுதலாக பாசன நீர் வழங்குவதன் மூலம் 45 நாள்களில் அணையின் முழு கொள்ளளவான 190 மில்லியன் கன அடியை நிரப்பிட இயலும்.
இத்திட்டத்தின் வாயிலாக சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தினைச் சார்ந்த மலையாளப்பட்டி, இடையப்பட்டி, தும்பல், பனைமடல், கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர் ஆகிய 6 கிராமங்களைச் சார்ந்த புதிய மற்றும் பழைய பாசன ஆயக்கட்டு என மொத்தம் 6,200 ஏக்கர் விளை நிலங்களுக்கும் கூடுதல் நாள்களுக்கு பாசன நீர் வழங்கிடவும் மற்றும் குடிநீர் ஆதாரத் தேவையினை மேம்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், காவிரி உபரி நீர் திட்டமான சரபங்கா திட்டத்துடன் இணைத்து வசிஷ்ட நதிக்கு நீர் வழங்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, மலைவாழ் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக நிறைவேற்றித்தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதம் சிகாமணி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .பாலச்சந்தர், உதவி ஆட்சியர் (பயிற்சி) வாகி சங்கீத் பல்வந்த், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் (திருச்சி மண்டலம்) ச.இராமமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் (சரபங்கா வடிநிலக்கோட்டம்) ந.ஆனந்தன் அவர்கள், சின்னகல்ராயன் மலை வடக்குநாடு ஊராட்சிமன்றத் தலைவர் வெங்கடேஷ், தெற்குநாடு ஊராட்சிமன்றத் தலைவர் பூங்கொடி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu