சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்கள்: ஆட்சியர் நாளை வழங்கல்
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்.
சேலம் மாவட்டத்தில் நாளை (26.01.2024) நடைபெற்றவுள்ள குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கவுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் குடியரசு தினவிழா சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இக்குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் காலை 8.05 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கௌரவிக்க உள்ளார்.
மேலும், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கவுள்ளார்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மைத்துறை, மகளிர் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.19.41 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தேசபக்தி, நாட்டுப்புறக் கலைகள் மற்றும் தமிழ்மொழியின் மேன்மையும், தமிழ் தலைவர்களின் பெருமையும் உள்ளிட்ட தலைப்புகளில் சுமார் 1,667 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
இக்குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர். இதற்கான பணிகளை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu