உலகில் வேறெங்கும் வழங்காத தமிழக மருத்துவச் சேவைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
11 மருத்துவக் கட்டடங்கள் இன்றைய தினம் திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சேலம் மாவட்டம், காரிப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இன்று (18.12.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 கட்டடங்களைத் திறந்து வைத்துப் பேசியதாவது:
காரிப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வட்டார பொது சுகாதார ஆய்வகக் கட்டடங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது. இதில் 62 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இங்கு சேகரிக்கப்படும் மாதிரிகளின் முடிவுகளை எப்பொழுது வேண்டுமானாலும் அறிந்துகொள்ளும் வகையில் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களான இளம்பிள்ளை, காரிப்பட்டி மற்றும் பேளூரில் தலா ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார ஆய்வகக் கட்டடங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. மேலும், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டர் குலமாணிக்கம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பண்ணப்பட்டி, நங்கவள்ளி கோட்டமேடு, ஒன்றியத்திற்குட்பட்ட வாழப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட கண்கட்டி ஆலா மற்றும் புழுதிக்குட்டை ஆகிய பகுதிகளில் தலா ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்களுக்கான கட்டட ங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வீரபாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாகவுண்டம்பட்டி மற்றும் பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னம சமுத்திரம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்களுக்கான கட்டடங்களும், தாரமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எஸ்பி கன்ஸ்ட்ரக்கன்ஸ் நிறுவனத்தின் பொது நிறுவன சமூக பொறுப்புகள் நிதியிலிருந்து ரூ. 60 இலட்சம் மதிப்பீட்டில் பிரசவ கால கவனிப்பு ஸ்கேன் அறையும் என மொத்தம் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கட்டடங்கள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மாநில அளவிலான 2 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 29.09.2021 அன்று வாழப்பாடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ஏழை எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டுக்கும் 1,250 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதுவரை 30 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இம்முகாமின் மூலம் பயன்பெற்றுள்ளனர்.
அதேபோன்று, கடந்த 10.07.2023 அன்று காடையாம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக "சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம்" தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 22.35 இலட்சம் நபர்களுக்கு அரசு துணை சுகாதார நிலையங்கள் மூலமும், 5.36 இலட்சம் நபர்களுக்கு துணை சுகாதார நிலையம் மூலமும் என மொத்தம் இதுவரை கடந்த 5 மாதங்களில் 27.71 இலட்சம் நபர்களுக்கு சிறுநீரக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்படுகின்றது.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று மட்டுமே மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே அரசின் மருத்துவச் சேவைகள் பொதுமக்களின் இல்லங்களுக்கேச் சென்று வழங்கப்படுகிறது. அந்தவகையில், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு மருத்துவச் சேவைகள் உலகில் வேறெங்கும் வழங்கப்படுவதில்லை. மேலும், தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் உயர்தர மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, அயோத்தியாப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஹேமலதா விஜயகுமார், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. இரா. மணி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) மரு.ச. சௌண்டம்மாள், மரு.என். யோகானந்த், உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu