ஏற்காட்டில் காபி வாரியம் மீண்டும்? விவசாயிகள் மனு

ஏற்காட்டில் மீண்டும் காபி வாரியம் நிறுவப்பட வேண்டும் என பழங்குடி விவசாயிகள் வலியுறுத்தல்
தமிழக மலைவாழ் பழங்குடியினர் மற்றும் இயற்கை விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் மதுர் ராமர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று முன்தினம் மேட்டூர் ராஜ்யசபா எம்.பி.யும், அகில இந்திய காபி வாரிய உறுப்பினருமான சந்திரசேகரனிடம் மனு அளித்தனர். அம்மனுவில், ஏற்காடு வட்டத்தில் உள்ள 67 கிராமங்களில் வாழும் சிறு, குறு விவசாயிகள் அனைவரும் பல தலைமுறைகளாக காபி சாகுபடி செய்து வருவதாகவும், 70 ஆண்டுக்கு மேலாக அரசு சார்பில் அமைக்கப்பட்ட காபி வாரியம் மூலம் அவர்கள் உற்பத்தி செய்த காபி கொட்டைகளை கொள்முதல் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். அந்த காலகட்டத்தில் ஆண்டுக்கு 8 முறை வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு போனஸ் வழங்கப்பட்டதாகவும், ஆனால் 1990ல் ஏற்காடு காபி வாரியம் கலைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது அவர்கள் உற்பத்தி செய்யும் காபி கொட்டைகளை தனியார் நிறுவனங்களிடம் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதையும், அதற்கும் உரிய விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி ஏற்காட்டில் மீண்டும் அரசு காபி கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ராஜ்யசபா எம்.பி. சந்திரசேகரன், "இந்த மனுவை காபி வாரியத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று ஏற்காட்டில் மீண்டும் கொள்முதல் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்" என உறுதியளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu