நாமக்கல் கிராமத்தில் லோ வோல்டேஜ் தாக்கம்,தேர்வு மாணவர்கள் இருளில் பாடம் படிக்கின்றனர்"

லோ வோல்டேஜால் எரியாத மின் விளக்குகள்: அரசு பொதுத்தேர்வு மாணவர்கள் படிக்க சிரமப்படுகின்றனர்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகிலுள்ள தொட்டியம்பாலி கிராமத்தில் குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின் விளக்குகள் விட்டுவிட்டு எரிவதால் பொதுத்தேர்வு மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து இரண்டு முனை மின் இணைப்பு வழங்கப்படுகிறது. நீண்ட தொலைவில் இருந்து மின்சாரம் வருவதால் லோ வோல்டேஜ் பிரச்னை நிலவுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் மாலை நேரத்தில் மின் விளக்குகள் எதுவும் சரியாக எரிவதில்லை. டியூப் லைட்டுகள் கண் சிமிட்டியபடியே உள்ளன. டிவி, வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள் இயங்க முடியாமல் திணறுகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் கூறுகையில், "லோ வோல்டேஜ் பிரச்னை குறித்து மங்களபுரம் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகாரளித்துள்ளோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் நடந்த 'மக்களுடன் முதல்வர்' முகாமில் கூட 39 குடும்பத்தினர் கையெழுத்திட்டு மனு கொடுத்தோம். ஆனால் எந்த பலனும் இல்லை. தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இப்பகுதியில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் இத்தேர்வை எழுதுகின்றனர். இந்த சமயத்தில் இதுபோன்ற லோ வோல்டேஜ் பிரச்னையால் இரவில் சரியாக மாணவர்களால் படிக்க முடியவில்லை. அதிகாரிகள் இதைக் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இந்த விவகாரம் குறித்து மங்களபுரம் உதவிப்பொறியாளர் குழந்தைவேலுவிடம் கேட்டபோது, "தொட்டியம்பாலி கிராமம் நகரத்தில் இருந்து மிகவும் கடைக்கோடியில் உள்ளது. இந்த கிராம மின் இணைப்பு 2024 வரை சேலம் மாவட்டத்துடன் இருந்தது. கடந்த ஓராண்டாகத்தான் நாமக்கல் மாவட்ட மின் பகிர்மானத்துடன் இணைக்கப்பட்டது. இதுகுறித்து புகார் வந்தவுடன் அந்த கிராமத்திற்கு வேறு வழியில் மின் இணைப்பு வழங்க முடியுமா என்ற சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க திட்ட மதிப்பீடும் தயார் செய்துள்ளோம். விரைவில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu