சேலத்தில் நவராத்திரி, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி

சேலத்தில் நவராத்திரி, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி
X
சேலத்தில் நவராத்திரி, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் கொலு பொம்மை வகைகளை பொதுமக்கள் வாங்கி கைவினைஞர்களின் வாழ்க்கைத் தர உயர்விற்கு உதவிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம், பழைய பேருந்து நிலையம், திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள அண்ணா பட்டு மாளிகை வளாக காதி கிராப்ட் கட்டிடத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி (16.09.2024) துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் பூம்புகார் என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்டு கைத்திறன் உலகில் தனக்கென்று தனி ஒரு முத்திரை பதித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நமது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவைகளை கைவினைக் கலைகள் மூலம் பேணிக்காப்பதோடு கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு பல்வேறு விருதுகளை கொடுத்து ஊக்குவித்து மற்றும் கைவினை கலைகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஓர் அரசு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

கைவினை கலைஞர்களும் மக்களும் பயன்பெறும் வகையில், பண்டிகை காலங்களிலும் விழாக் காலங்களிலும் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு தொடர்ச்சியாக சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் வருகின்ற நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு "கொலு பொம்மைகள் கண்காட்சி" என்ற சிறப்பு கண்காட்சியினை சேலம், பழைய பேருந்து நிலையம், திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் 16.09.2024 முதல் 25.10.2024 வரை ஞாயிறு உட்பட தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை முடிய நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் அனைத்து வகை கொலு பொம்மைகள் குழுவாகவும், தனியாகவும் பல கருத்துக்களை எடுத்துரைக்கும் வண்ணம் கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், குழந்தைகள் விளையாடக்கூடிய சென்னபட்டனா பொம்மைகள் போன்ற எண்ணற்ற பல வகையான பொம்மைகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொம்மைகளுக்கும் 10% சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.

எவ்வித சேவை கட்டணமுமின்றி இக்கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காகவும் மற்றும் விற்பனைக்காகவும் பல்வேறு இடங்களில் இருந்து தருவிக்கப்பட்ட அழகிய கொலு பொம்மைகளை பொதுமக்கள் வாங்கி தங்கள் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதோடு இந்த சிலைகளை உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் நரேந்திர போஸ் உட்பட பூம்புகார் விற்பனை நிலைய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself