தாமதப்படுத்தப்படும் காகாபாளைய மேம்பால பணி என்ன நடக்குது?

தாமதப்படுத்தப்படும் காகாபாளைய மேம்பால பணி என்ன நடக்குது?
X

கோப்புப் படம் - கட்டுமான பணிகள் நடக்கும் மேம்பாலம்

காகாபாளையத்தில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணி தாமதப்படுத்தப்பட்டு வருவதாக பொதுமக்கல் குற்றம் சாட்டியுள்ளனர்.

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் காகாபாளையம் மேம்பாலம் வருகிறது. ஆனால் இது கட்டும்பணி தொடர்ந்து தாமதமாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைந்து முடிக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சேலத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காகாபாளையம் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட மகுடஞ்சாவடி ஒன்றியம் கனககிரி ஊராட்சியில் அமைந்துள்ள காகாபாளையத்தில், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளி எனும் பெயரில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வரும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் அருகாமையிலுள்ள வேம்படிதாளம், காகாபாளையம், ராக்கிப்பட்டி, அய்யம்பாளையம், நடுவனேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்.

பள்ளிக்கு வரும் வழியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்தேறி வருகின்றன. இதனால் நிறைய உயிரிழப்புகளும் பல்வேறு நபர்களுக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஏற்பட்ட விபத்து ஒன்றின் காரணமாக சாலைமறியல், உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று அரசும் இந்த பகுதியில் பாலம் கட்ட அனுமதி அளித்தது.

அதன்பிறகு சுமார் ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கின. இந்த உயர்மட்ட மேம்பாலமானது சேலத்தில் இருந்து 16 கிலோ மீட்டரில் இருக்கும் செல்லியம்பாளையத்தில் துவங்கி, கனககிரி ஏரி வரைக்கும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், ஈரோடு, கோவை மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை மார்க்கமாக பயணிப்பவர்கள் இணைப்பு சாலை வழியாக தான், சென்று வருகின்றனர்.

இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. காலை, மாலை வேளைகளில் டிராபிக் ஜாம் ஏற்படும்பட்சத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. ஆமை வேகத்தில் தொடர்ந்து ஊர்ந்து செல்லும் நிலையும் இந்த வழியாக பயணிப்பவர்களுக்கு மிகப் பெரிய தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதமே முடிக்கப்பட வேண்டிய இந்த மேம்பால பணிகள், காலக்கெடு முடிந்து 1 ஆண்டுகள் கடந்தும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. விரைந்து பால பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தேவையான மண் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் அந்த பிரச்னை தீர்க்கப்பட்டு கூடிய விரைவில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!