சேலம் கோட்டத்தில் 78 ரயில்வே ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை
கோப்புப்படம்
ரயில்வே ஸ்டேஷன்களில் தீவிரகண்காணிப்பு, குற்றத்தடுப்பு நடவடிக்கைள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், திருட்டு, வழிப்பறி, ஏமாற்றுதல் உள்ளிட்டவையும், போதைப்பொருள் கடத்தல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான செயல்களும் அவ்வப்போது நடந்துவருவது வாடிக்கையாக இருந்துவருகிறது. இவற்றை தடுக்கும் வகையில் சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட சேலம், ஈரோடு உள்ளிட்ட 78 ரயில்வே ஸ்டேஷன்களில் 1200க்கும் மேற்பட்ட சிசிடிவி கமராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்ட பொது மேலாளர் பங்கஜ் குமார் இது குறித்து கூறியதாவது : ரயில்வே ஸ்டேஷன்களில் நடைபெறும் குற்றங்களை தடுத்திடவும் அசம்பாவித சம்பவங்களை கண்காணிக்கவும் சேலம் ரயில்வே கோட்டத்தில் உட்பட்ட 78 ரயில்வே ஸ்டேஷன்களிலும் சுமார் 1200 சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 6 மாதத்திற்குள் இந்த பணிகள் முடிவடையும்.
ஏற்கனவே கோவை, ஈரோடு திருப்பூர், சேலம் உள்ளிட்ட பெரிய ரயில்வே ஸ்டேஷன்களில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மீதமுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் விரைவில் பொருத்தப்படும் .
மேலும் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ஏற்கனவே பல ரயில்வே ஸ்டேஷன்களில் அந்தந்த ரயில் நிலையங்களுக்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலமாக எடுத்து வருகிறோம். விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சோலார் இயந்திரங்கள் பொருத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரயில் நிலையங்களிலோ அல்லது ரயிலிலோ அனுமதிக்கப்பட்ட நிறுவனத்தின் சார்பிலோ உணவுப்பொருட்கள் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும். அதையும் மீறி ரயில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்பவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சேலம் ரயில்வே கோட் டத்தில் 8763 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் 7218 பேர் வருவார்கள். மீதமுள்ளவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் பயன் பெறுவார்கள்.
மேலும் மத்திய அரசு அறிவித்ததன்படி 25 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் நபருக்கு, அவர் ஓய்வு பெறும் மாதம் வாங்கிய சம்பளத்தில் சதவிகிதம் ஓய்வூதியம் வழங்கப்படும். உயிர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இதே போன்ற அடிப்படையில் 60 சதவிகிதம் வழங்கப்படும். அரசின் அறிவிப்பின்படி குறைந்தபட்ச ஓய்வூதியமாக 10 ஆயிரம் வரை கிடைக்கும். பணி காலத்தை பொறுத்து அவரது ஓய்வூதியம் மாறுபடும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu