சேலம் மாவட்டத்தில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.
சேலம் மாவட்டத்தில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் மட்டும் 4.12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:
தமிழக முதல்வர் பெண்கள் சமுதாயத்தில் தற்சார்பாக வாழ்வதற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்களின் உயர் கல்வி முன்னேற்றத்திற்காக கடந்த 05.09.2022 அன்று "புதுமைப் பெண்" திட்டத்தை முதல்வர் செயல்படுத்தினார். இத்திட்டம் செயல்படுத்தி ஓர் ஆண்டு காலம் தற்பொழுது முடிவடைந்துள்ளது.
"புதுமைப் பெண்" திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதால் பாலின சமத்துவம் தடுக்கப்படுவதுடன், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவிட முடிகிறது. மேலும், மாணவிகள் தங்களின் விருப்பப்படி மேற்படிப்பைத் தொடர ஊக்குவித்திடவும், உயர்கல்வியினால் திறமையை மேம்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க வாய்ப்பாக அமைகிறது. இதன்மூலம் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதுடன் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க "புதுமைப் பெண்" திட்டம் வழிவகை செய்கிறது.
"புதுமைப் பெண்" திட்டத்தில் பயன்பெறும் மாணவிகள் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும்.
மாணவிகள் 8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். குறிப்பாக, ஒரு குடும்பத்தில் பிறந்த அனைத்து பெண் குழந்தைகளும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இத்திட்டத்தின் கீழ் பயனடைய குடும்ப வருமான உச்ச வரம்பு கிடையாது. புதுமைப் பெண் திட்டத்தில் சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு (டிப்ளமோ / ITI), இளங்கலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர். தகுதியுடைய மாணவிகளுக்கு மாதந்தோறும் உயர்கல்வி உறுதித் தொகையாக ரூ.1,000/- வழங்கப்படுகிறது.
மேற்காணும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் மாதாந்திர உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஏதுவாக, தகுதியுடைய கல்லூரி மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்குகளில் அவர்களுக்குரிய உதவித் தொகைகள் வரவு வைக்கப்படுகிறது.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் "புதுமைப் பெண்" திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000/- வீதம் முதற்கட்டமாக 7,994 மாணவிகளுக்கு 9,59,28,000/- ரூபாயும், இரண்டாம் கட்டமாக 8,014 மாணவிகளுக்கு 5,60,98,000/- ரூபாயும் என மொத்தம் 16,008 மாணவிகளுக்கு 15,20,26,000/- ரூபாய் மாணவிகளின் உயர்கல்வி முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.-
சேலம் மாவட்டத்தில் 2021 2022 ஆம் ஆண்டில் 20,391 பேர் (48.50 சதவிகிதம்) உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். 2022 - 2023 ஆம் ஆண்டில் மட்டும் 22,123 பேர் (52.62 சதவிகிதம்) உயர்கல்வியில் சேர்ந்து பயின்று வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் மட்டும் 4.12 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண் சமுதாயத்தை முன்னேற்றி வலிமையான பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையும் நோக்கில் இப்புதுமைப் பெண் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu