சேலத்தில் புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி கண்காட்சி விற்பனை

சேலத்தில் புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி கண்காட்சி விற்பனை
X
சேலத்தில் புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி இரகங்களுடன் 60 அரங்குகள் விற்பனைக் கண்காட்சி ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி இரகங்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன் தமிழகத்தில் முக்கிய இடங்களில் இந்திய அரசின் நிதியுதவியுடன் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி (State Level Handloom Expo) சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் 27.10.2023 முதல் 10.11.2023 வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் கோவை, ஈரோடு, நாமக்கல், வேலுார், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருப்பூர், கரூர், மதுரை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், கடலூர், கும்பகோணம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்தும் கைதேர்ந்த நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி இரகங்களான சேலம் வெண்பட்டு வேட்டி, திருபுவனம் பட்டு சேலை, காஞ்சிபுரம் பட்டு சேலை, கோவை கோரா காட்டன், ஈரோடு பவானி ஜமுக்காளம் ஆகியவையும் மற்றும் கரூர் பெட்சீட், சென்னிமலை பெட்சீட், துண்டு, மெத்தை விரிப்பு ஆகிய கைத்தறி இரக ஜவுளி இரகங்கள் கொண்ட 60 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்), தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் (காதி கிராப்ட்), மத்திய ஜவுளி துறையின் கைவினைப்பொருட்கள் (வீட்டு உபயோகப் பொருட்கள்), நெசவாளர் சேவை மையம் சேலம், டெக்ஸ்டைல் கமிட்டி திருப்பூர் மற்றும் ஆவின் சேலம் ஆகிய துறைகளின் உற்பத்தி பொருட்களை மேற்படி மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியில் (எக்ஸ்போ) காட்சிப்படுத்தி அரசு வழங்கும் 30% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.

தற்போது நடைபெறவுள்ள மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியில் சுமார் ரூ.3 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் கைத்தறித் துணிகள் மற்றும் கைவினைப் பொருட்களை வாங்கிப் பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநர் மாதேஸ்வரன், சேலம் நெசவாளர் சேவை மைய கார்த்திகேயன், கைத்தறித்துறை அலுவலர்கள் மரகதம், சலீம் அகமது உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story