சேலம் - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்ல வரும் 11ம் தேதி முதல் வாகனங்களுக்கு அனுமதி

சேலம் - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்ல வரும் 11ம் தேதி முதல் வாகனங்களுக்கு அனுமதி
X

ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Salem News Today: சேலம் - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்ல வரும் 11ம் தேதி முதல் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Salem News Today: சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியானது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் பகுதியாகும். குறிப்பாக, கோடை காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்துசெல்லும் சுற்றுலாப் பயணிகள் விபத்தில்லாப் பயணம் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இன்றைய தினம் ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை சீரமைப்புப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையின் 2வது கொண்டை ஊசி வளைவினை சரி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கியதன் அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கொண்டை ஊசி வளைவு 17 மீட்டர் உயரம் மற்றும் 30 மீட்டர் அகலம் கொண்டுள்ளது. இதில் 22 அடுக்குகளாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 10 நாட்களில் இச்சீரமைப்புப் பணிகள் முடித்திட்டத் திட்டமிடப்பட்டது. ஆனால் ஒரு வார காலத்திற்குள் இரு முறை கனமழை பெய்ததால் பணிகளை முடித்திட சற்று தாமதம் ஏற்பட்டது. எனவே, வருகின்ற ஒரு வார காலத்தில் இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும்.

ஏற்காடு மலைப்பாதையில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பாதுகாப்பு நலன் கருதி சேலம் – கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் சாலை வழியாக தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. தற்போது இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை, பொதுப் பணித்துறை, போக்குவரத்துத்துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து கலந்தாய்வு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், வருகின்ற 06.05.2023, சனிக்கிழமை முதல் சேலம் - கோரிமேடு வழியாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் மட்டும் வந்துசெல்ல அனுமதிக்கப்படும். 10.05.2023 அன்று சாலை சீரமைப்புப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவுபெறும். எனவே, 11.05.2023, வியாழக்கிழமை முதல் கன ரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்துவாகனங்களும் சேலம் - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குப்பனூர் சாலையில் சில விபத்துக்கள் ஏற்படுகின்றன. நடந்த வாகன விபத்துக்களை ஆய்வு செய்ததில் டெம்போ டிராவலர் உள்ளிட்ட வாகனங்களில் BRAKE FAILURE ஒரு காரணம் எனத் தெரிய வருகிறது. எனவே, ஏற்காட்டிற்குச் செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படும். தகுதி இல்லாத வாகனங்கள் மலைப்பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படாது.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்தும் பயணிக்க வேண்டும். மேலும், தொலைதூரப் பகுதிகளில் இருந்து வாடகை வாகனங்களில் வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகன ஓட்டுநருக்கு மலைப்பகுதிகளில் வாகனத்தை இயக்குவதற்கு உரிய அனுபவம் உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.

மலைச் சாலைகளில் கீழே இறங்கும்போது Neutral Gear-இல் இறங்காமல், முதல் கியர் அல்லது இரண்டாவது கியரில் வாகனத்தை இயக்க வேண்டும். குறிப்பாக, கொண்டை ஊசி வளைவுகளில் வாகனத்தை இயக்கும்போது 10 கி.மீ வேகத்திலே செல்ல வேண்டும். ஏற்காடு சுற்றுலா வரும் வாகன ஓட்டுநர், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறையினரால் வழங்கப்படும் அறிவுரைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், சேலம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) மாறன், நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டப் பொறியாளர் முனைவர் செ.துரை, தேசிய நெடுஞ்சாலைகள் கோட்டப் பொறியாளர் நடராஜன், திட்ட இயக்குநர் (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) ரமேஷ், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் மகாவிஷ்ணு, ஏற்காடு வருவாய் வட்டாட்சியர் ம.தாமோதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா