சேலம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 250 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைகள்

சேலம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 250 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைகள்
X

இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சென்னைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து அனுப்பி வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 250 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைகள் மேற்கோள்ளப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சென்னையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சென்னைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி இன்று (12.08.2024) மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து அனுப்பி வைத்தார்.

பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:

ஊட்டச்சத்துள்ள சமுதாயத்தை உருவாக்கிடும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிறந்தது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளில் ஏற்படும் பிறவிக் குறைபாடுகள், நோய்கள், இயலாமை உள்ளிட்ட வளர்ச்சி தாமதங்களை சேலம் மாவட்டத்தில் செயல்படும் 42 பள்ளிசிறார் மருத்துவக் குழுக்கள் (21 ஆண்கள், 21 பெண்கள்) மூலம் முன்கூட்டியே கண்டறிந்து ஆரம்ப கால தலையீட்டை நோக்கமாக கொண்டு பள்ளிசிறார் நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இக்குழுவினர் ஆண்டுக் ஒருமுறை பள்ளிகளுக்கும், ஆண்டுக்கு இருமுறை அங்கன்வாடி மையங்களுக்கும் வருகை புரிந்து பரிசோதனை செய்து பாதிப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை அளித்தும், தேவைப்படின் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்தும், தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

2021 ஆண்டிலிருந்து ஜுலை-2024 வரை சேலம் மாவட்டத்தில் 939 குழந்தைகளுக்கு இருதயத்தில் குறைபாடு இருப்பது புதியதாக கண்டறியப்பட்டு, 250குழந்தைகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமாக எவ்வித கட்டணமும் இன்றி இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டும், மீதமுள்ள குழந்தைகள் மருத்துவ ஆலோசனை மூலமாக தேவையான மருந்து மாத்திரைகள் உட்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 6 ருமாட்டிக் இருதய குறைபாடு அறுவை சிகிச்சை, 41 வளைபாதம் அறுவை சிகிச்சைகள், 101 பிளவு உதடு மற்றும் பிளவு அன்னம் அறுவை சிகிச்சைகள், 33 பிறவி கண் புரை அறுவை சிகிச்சைகள், 20 பிறவி காது கேளாமை அறுவை சிகிச்சைகள், 18 நரம்புமண்டல குறைபாடு அறுவை சிகிச்சைகளும் பள்ளிசிறார்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை, இணைந்து கடந்த 27.07.2024 அன்று நடத்திய இருதய மருத்துவ முகாமில் பள்ளி சிறார் நலத் திட்ட குழுக்களினால் பள்ளிகளில் மருத்துவ பரிசோதனை செய்து பரிந்துரை செய்யப்பட்ட, சேலம் மாவட்டத்தைச் சார்ந்த 146 குழந்தைகளுக்கு இசிஜி, எக்கோ ஸ்கேன் மற்றும் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 10 குழந்தைகளுக்கு மட்டும் இருதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சென்னை அப்போலோ மருத்துவமனையில் இக்குழந்தைகளுக்கு கட்டணமில்லா அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சென்னைக்கு அழைத்துச் செல்லும் வாகனம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் நல பணிகள் (பொ) ராதிகா, துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மாள், யோகானந் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!