சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: ஆட்சியர் ஆய்வு தீயணைப்பு
மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கார்மேகம்
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சேலம் மாவட்டத்திற்கு மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களுக்கும் தலைமை மருத்துவ மனையாக இருந்து வருகிறது. நாள்தோறும் சுமார் 2000 -க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் முதல் தளத்தில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. வீரர்கள் விரைந்து தீயை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
இதை அறிந்ததும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். மேலும் அங்கு பல்வேறு இடங்களை ஆய்வு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இன்று காலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக புகை பரவியது. இதனையடுத்து, தீயணைப்புத் துறையினரிடம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.
இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளனர். மின் கசிவு ஏற்பட்ட வார்டில் இருந்த 65 நோயாளிகளையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின் கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்பினால் நோயாளி களுக்கோ அல்லது மருத்துவ உபகரணங்களுக்கோ எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேலும் புதிய நோயாளிகள் வருகைதரும்போது அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கவும் தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பொதுப் பணித்துறையின் மின் பிரிவு அலுவலர்கள் எவ்வாறு மின் கசிவு ஏற்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவ மனையின் முதல்வர், இணை இயக்குநர் நலப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் உள்ளிட்டோர் மின் கசிவு ஏற்பட்ட வார்டில் மீண்டும் இயல்பான மருத்துவச் சேவை தொடங்கி நடைபெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் முதல்வர் மணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவ லர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu