ஏற்காட்டில் 30 அடி பாறையிலிருந்து தவறிவிழுந்து தந்தை, மகள் உயிரிழப்பு

ஏற்காட்டில் 30 அடி பாறையிலிருந்து தவறிவிழுந்து தந்தை, மகள் உயிரிழப்பு
X

பைல் படம்.

Salem News Today: ஏற்காட்டில் 30 அடி பாறையிலிருந்து தவறிவிழுந்து தந்தை, மகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Salem News Today: சென்னை மாநகரின் மந்தைவெளியைச் சேர்ந்தவர் பாலமுரளி (43). ஐ. டி. நிறுவன ஊழியரான இவருக்கு மனைவி சந்திரலட்சுமி, சவுமியா (13), சாய் சுவேதா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் சவுமியா தற்போது 8-ம் வகுப்பு தேர்வெழுதியுள்ளார்.

கோடை விடுமுறை என்பதால் பாலமுரளி தனது குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தார். ஏற்காட்டில் விடுதி ஒன்றில் குடும்பத்துடன் தங்கி இருந்த பாலமுரளி, பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் ஏற்காட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பாலமுரளி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தார். பின்னர் சவுமியா அங்குள்ள பாறை ஒன்றின் மீது ஏறி விளையாடினார். அப்போது உடை மாற்றும் அறை கட்டுவதற்காக நீர்வீழ்ச்சி அருகில் 30 அடி உயர பாறையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் சவுமியா ஏறினாள். மகள் ஏறுவதை பார்த்த பாலமுரளி, அங்கு செல்லாதே என்று கூறிக்கொண்டே பின்னால் அவரும் பாறையில் ஏறினார்.

பாறையின் உச்சிப்பகுதிக்கு சென்ற சிறுமி அங்கிருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாள். மகள் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுரளி, அவளை காப்பாற்ற சென்றார். அவரும் பாறையில் இருந்து கீழே விழுந்தார். தந்தையும், மகளும் பாறையில் இருந்து கீழே விழுந்து உருண்டபடி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழும் பகுதிக்கு வந்தனர். நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் அலறியபடி தந்தையும், மகளையும் காப்பாற்ற ஓடோடி வந்தனர். நீர்வீழ்ச்சியில் விழுந்து கிடந்த 2 பேரையும் மீட்டனர். அவர்கள் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது. கணவர், மகளின் உடலை கண்டு சந்திரலட்சுமி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஏற்காடு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த தந்தை மற்றும் மகளின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்த பயணிகளிடையே இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!