பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
X

சேலம், மணக்காடு மாநகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்திற்கு உணவுகள் தயார் செய்யப்படும் இடத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  நேரில் சென்று பார்வையிட்டார்.

Salem News Today: பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Salem News Today: சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் முன்னிலையில் வகித்தார்.

இக்கூட்டத்திற்குப்பின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு உடனுக்குடன் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் இன்று அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

குறிப்பாக, வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், புனரமைப்புத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இ-சேவை மையங்களின் செயல்பாடுகள், இலவச வீட்டுமனைப்பட்டா, நத்தம் பட்டா, இந்து மலையாளி சாதிசான்றிதழ் குறித்த பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்தும், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும் இயக்கம், இல்லம் தேடி கல்வித் திட்டம், காலை உணவுத் திட்டம், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் செயல்படுத்தப்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள், சுகாதாரத்துறையின் தொடர்பான பணிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். மேலும், அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்திட அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக சேலம், மணக்காடு மாநகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்திற்கு உணவுகள் தயார் செய்யப்படும் இடத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் பயிற்சி சங்கீத் பல்வந்த் வாகி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் (பொ) அசோக்குமார் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story