எடப்பாடி அருகே கல்லூரி பஸ்- தனியார் பஸ் மோதல்: 20 பேர் படுகாயம்
விபத்துக்குள்ளான கல்லூரி மற்றும் தனியார் பேருந்துகள்.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து சங்ககிரிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தினை, டிரைவர் அருணாசலம் ஓட்டி சென்றார். பேருந்தினுள் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
எடப்பாடியை அடுத்த கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே தனியார் பஸ் சென்ற போது, திருச்செங்கோட்டில் இருந்து எடப்பாடிக்கு, 55 மாணவ, மாணவியருடன் வந்து கொண்டிருந்த தனியார் கல்லூரி பஸ் ஒன்று, தனியார் பேருந்து மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
எதிர்பாராத இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்புறம் நொறுங்கின. இந்த விபத்தில் கல்லூரி மாணவியர் உட்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், எடப்பாடி, கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, எடப்பாடி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் வேடியப்பன், எடப்பாடி தாசில்தார் லெனின், வருவாய் ஆய்வாளர்கள் முருகேசன், வனஜா ஆகியோர் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
தற்போது, இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த காட்சியில், சாலை விதிகளை மதித்து சரியாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது, சாலை விதிகளை மீறி அதிவேகமாக வந்த கல்லூரி பேருந்து தனியார் பேருந்து மீது மோதியுள்ளதுபோல் தெரிகிறது.
தனியார் பேருந்துகள், பள்ளி கல்லூரி வாகனங்களில் சினிமா பாடல் ஒலித்த படியே இயக்கப்படுகின்றன. அதேபோல், நேரம் கருதி அதிவேகமாக செல்வதே, இதுபோன்ற விபத்துக்கு காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu