கால்வாய் குழாயில் தேங்கிய நீர் வெளியேற்றம்

கால்வாய் குழாயில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டது
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 வரை 9.5 டி.எம்.சி. நீர் பாசனத்துக்கு வெளியேற்றப்படும். இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு அணை நிரம்பியதால் முன்னதாக ஜூலை 30ல் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. டிசம்பர் 13ல் பாசன நீரை நிறுத்த வேண்டியிருந்தாலும் விவசாயிகள் கோரிக்கையால் பாசன நீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 15ல் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அடுத்த காவேரிகிராஸ் பகுதியில் கால்வாய் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிகிறது. இதில் மேற்கு கால்வாயில் 43 கிலோமீட்டருக்கு தண்ணீர் பாசனத்துக்குச் செல்கிறது. அதற்காக காவிரி குறுக்கே 1,342 அடி நீளம், 7 அடி விட்டம் கொண்ட இரு பெரிய குழாய்கள் 22 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டன. அந்தக் குழாய்கள் வழியே 1956 ஆகஸ்ட் 5 முதல் பாசனத்துக்குத் தண்ணீர் செல்கிறது. ஆண்டுதோறும் பாசன நீரை நிறுத்திய பின் பராமரிப்புப் பணிக்கு குழாய்களில் தேங்கி நிற்கும் நீர் ஆயில் மோட்டார் மூலம் வெளியேற்றப்படும். அதன்படி கால்வாயில் பாசன நீர் நிறுத்தி இரு மாதங்களுக்குப் பின், கடந்த 27ம் தேதி முதல் நேற்று வரை 6 நாட்களாக இரும்புக் குழாய்களில் தேங்கி நின்ற நீரை நீர்வளத்துறை ஊழியர்கள் ஆயில் மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu