உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகம் சிங்கப்பூராக மாறிவிடும்.. சீமான்பேட்டி

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகம் சிங்கப்பூராக மாறிவிடும்.. சீமான்பேட்டி

சேலத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பேட்டி அளித்தார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகம் சிங்கப்பூராக மாறிவிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் ஆளுநருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. மக்களின் நலன்கருதி எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் நகர்ந்து போகிறார். இதனால் தான் ஆளுநரை அவசியம் இல்லை என்று சொல்கிறோம்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி ஒரு முடிவு எடுக்கிறது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் தடுக்கிறார். அப்படி என்றால் எட்டு கோடி மக்களுக்கு மதிப்பு எங்கு உள்ளது? எங்கு ஜனநாயகம் உள்ளது என்று தெரியவில்லை.

தமிழகத்தில் ஆளுகின்ற திமுக தவறான பாதையில் செல்கிறதாக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார். மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில் எதில் சரியாக செல்கிறது. எல்லாவற்றையும் எடுத்து தனியார் முதலாளிகளுக்கு கொடுத்துள்ளார்கள். மக்களை பதட்டத்தில் வைத்துள்ளனர்.

அனைத்தும் ஆதார் தான் என்றால் தேசிய குடியுரிமைச் சான்றிதழ் எதற்காக?. பாஜக ஆளும் மற்ற அனைத்து மாநிலங்களிலும் சரியான பாதையில் செல்கிறதா? என்பதற்கு பதில் இல்லை. தமிழகத்தில் இலவசத்தை தொடக்கத்தில் இருந்தே வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி எதிர்த்து வருகிறோம்.

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தான் மக்கள் அரசு, தேர்தல் நேரத்தில் அறிவித்து நாங்கள் வந்தால் இதை வழங்குகிறோம், அதை வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள். ஆட்சிக்கு வந்து அதை தர வேண்டியதுதானே. அவ்வாறு கூறுவதும் ஒருவித கையூட்டும் தான் என சீமான் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியில் பயங்கரவாதிகள் இருப்பதாக பிரதமர் மோடி பேசியுள்ளாரே என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசும்போது, மொத்த பயங்கரவாதியும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் தான் உள்ளார்கள் என்று சீமான் விமர்சனம் செய்தார்.

மேலும், தமிழக அரசின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சீமான், தமிழக அரசின் செயல்பாடு கேள்வி கேட்கும் அளவிற்கு உள்ளது என தெரிவித்தார். ஆளுநரை திரும்ப பெற வேண்டுமா? என்ற கேள்விக்கு, நாட்டில் ஆளுநரே வேண்டாம் என சீமான் தெரிவித்தார்.

தமிழகத்தில் முன்பைவிட போதைப் பொருட்கள் விற்பனை கூடியுள்ளது. சட்டம் ஒழுங்கு எந்த அளவில் உள்ளது என்று கேள்வி எழுப்பும் அளவில் உள்ளது என சீமான் குற்றம்சாட்டினார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, நாடே தலைகீழாக மாறிவிடும், சிங்கப்பூராக மாறிவிடும் என்று சீமான் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறியதாவது: மின்சாரத் துறையில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது அவசியமற்ற ஒன்று. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும் என்று கூறினார்கள். தற்போது ஆட்சிக்கு வந்தும் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை தான் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஏற்கனவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய கணினி உலகத்தில் டிஜிட்டல் பேசும் திமுகவால் கணக்கெடுப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது. ஆனால், திமுக அரசு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இல்லம் தேடி கல்வி திட்டத்திலும் புதிய கல்வி கொள்கை உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் எட்டு வழிச்சாலையை திமுக எதிர்த்தது. ஆனால் தற்போது பயண நேரம் குறைப்பு சாலை என்ற பெயரில் மீண்டும் நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள் என சீமான் தெரிவித்தார்.

Tags

Next Story