சேலம் மாவட்டத்தில் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

கருப்பூர் பேரூராட்சி, குண்டுக்கல் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் கல்வித்திறன் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் ரூ.954.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் சங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, முன்னிலையில் இன்று (16.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசால் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் தரமாகவும், குறிப்பிட்ட காலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதை உறுதிசெய்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இன்று காலை சேலம் மாவட்டம், கருப்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமாகவும், சுவையாகவும், குறித்த நேரத்தில் சமைத்து வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் தொடர்புடைய அலுவலர்கள் நாள்தோறும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கருப்பூர் பேரூராட்சி, குண்டுக்கல் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் கல்வித்திறன் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், கருப்பூர் பேரூராட்சியில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஓமலூரில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ் ரூ.950 கோடி மதிப்பீட்டில் ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் ஓமலூர் முதல் சங்ககிரி திருச்செங்கோடு வழியாக பரமத்தி வரை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டில் உரிய தரத்துடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.30.10 இலட்சம் மதிப்பீட்டில் ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டை மாரியம்மன் கோவில் அருகே கட்டப்பட்டுவரும் ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டுமானப் பணியினையும், மேல்காமாண்டப்பட்டி, கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்பட்டுவரும் பணிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் கஞ்சநாயக்கன்பட்டி, ராக்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கலையரசி க/பெ. ரமேஷ் என்பவரின் வீட்டினை ரூ.32 ஆயிரம் மதிப்பீட்டில் பழுது பார்க்கப்பட்டுவரும் பணியினையும், செம்மாண்டப்பட்டி ஊராட்சியில் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.43.83 இலட்சம் மதிப்பீட்டில் செம்மாண்டப்பட்டியில் கட்டப்பட்டுவரும் சமுதாயக்கூட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.21 இலட்சம் மதிப்பீட்டில் மூக்கனூர் ஊராட்சியில் கற்கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சேலம் மாநகராட்சி, குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்றுவருவதை ஆய்வு செய்து, அங்குள்ள சத்துணவு மையத்தில் மாணவிகளுக்கு தயார் செய்து வழங்கும் உணவு தரமாகவும், குறித்த நேரத்திலும் சமைத்து வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ரூ.954.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்துப் பணிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்ட கோட்டப் பொறியாளர் துரை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story