பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கடன் பெற விண்ணப்பங்கள் விநியோகம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கடன் பெற விண்ணப்பங்கள் விநியோகம்
X

பைல் படம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் சுயதொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ஆம் நிதியாண்டிற்குரிய கடன் திட்டங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொதுகாலக்கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவைமாட்டுக் கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது .

விண்ணப்பதாரர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மனுதாரருக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேம்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும் (ஆதார் எண் அவசியம்), சுய உதவி குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும் மற்றும் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்போது சாதிச்சான்று, வருமானச்சான்று, பிறப்பிட சான்றிதழ் நகல்கள், முன்னணி நிறுவனம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி, திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), குடும்பஅட்டை (Smart Card) / ஆதார் அட்டைநகல், வங்கி கோரும் இதர ஆவணங்கள் (ம) அடமானத்திற்குரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.

பொதுக்காலக்கடன் திட்டத்தின் கீழ் தனிநபர் கடன் அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6% முதல் 8% வரை, நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. குழுவிற்கு அதிபட்சம் ரூ.15.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது, ஆண்டு வட்டிவிகிதம் 4% ஆகும். பெண்களுக்கான புதிய பொற்காலத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது, வட்டி விகிதம் 5% ஆகும்.

ஆடவருக்கான நுண்கடன் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்ச கடன் தொகையாக ரூ.1.25 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. குழுவிற்கு அதிக பட்சம் ரூ.15.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. வட்டிவிகிதம் 5% ஆகும். பொதுக்காலக் கடன் திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/- வீதம் இரண்டு கறவை மாடுகள் வாங்க அதிகபட்சமாக ரூ.60,000/- வரை. வட்டிவிகிதம் 6% வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

மேலும், இக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவி விண்ணப்பங்கள் மற்றும் இதர கடனுதவி விவரங்களை சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலும் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகள் ஆகியவற்றிலும் நேரில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!