சேலம் மாவட்டத்தில் வரும் 25ம் தேதி வரை வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.
Salem News Today: சேலம் மாவட்டத்தில் இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு வருடமும் "தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்" இரு வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது. இம்முகாமின் முக்கிய நோக்கமானது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலுமாக தவிர்த்தல் ஆகும். இவ்வருடம் இம்முகாமானது 12.06.2023 முதல் 25.06.2023 வரை நடைபெறுகிறது.
இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஐந்து வயது குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று ORS எனப்படும் உப்புநீர் கரைசல் தூள் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்கி வயிற்றுப்போக்கின் போது அதனை உபயோகிப்பது பற்றி விழிப்புணர்வூட்டுவர்.
அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் ORS பகுதி அமைக்கப்படும் மற்றும் ORS உப்பு நீர் கரைசல் தயாரிப்பது, கை கழுவும் முறை, பிரத்யேக தாய் பால் அளிக்கும் முறை, இணை உணவு வழங்கும் முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பிற்கான முக்கிய காரணங்களில் வயிற்றுப்போக்கு ஒன்றாகும். அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கால் குழந்தைகளுக்கு நீர்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும்.
இந்நீர்சத்து குறைபாட்டினை தடுக்க ORS (உப்புநீர் கரைசல்) எனும் உயிர்காக்கும் அமுதம் அளிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பினை தடுக்கலாம். மேலும் வயிற்றுப்போக்கின் போது துத்தநாக மாத்திரையை 14 நாட்களுக்கு தொடர்ந்து கொடுப்பதால், வயிற்றுப்போக்கு விரைவில் குணமடையும்.
வயிற்றுப்போக்கு எளிதில் தடுக்க கூடிய நோய்களில் ஒன்றாகும். பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு பற்றிய விழிப்புணர்வின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்தலாம். இதனை கருத்திற்கொண்டு தேசிய அளவில் சேலம் மாவட்டத்தில் உள்ள 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 501 துணை சுகாதார நிலையங்கள், 13 அரசு மருத்துவமனைகள் மற்றும் 2,696 அங்கன்வாடி மையங்களில் இம்முகாம் நிறுவப்பட உள்ளது.
இம்முகாம்களில் பொது சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட துறைகளைச் சார்ந்த 3,212 பணியாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் இம்முகாமின் மூலம் 2,60,000 ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயன்பெற உள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu