ஆத்தூர் அருகே சூறைக்காற்றில் வாழை, மஞ்சள் பயிர்கள் சேதம்

ஆத்தூர் அருகே சூறைக்காற்றில் வாழை, மஞ்சள் பயிர்கள் சேதம்
X

சூறைக்காற்றால் சேதமான வாழை மரங்கள்.

ஆத்தூர் அருகே சூறைக்காற்றில் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பேரூராட்சி பகுதியில் விவசாயிகள் வாழை, நெல், மஞ்சள், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் நேற்று மாலை கீரிப்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து, சேதம் அடைந்தன. மேலும் மஞ்சள், மக்காச்சோளம் பயிர்களும் சேதமாகின. இதனால் விவசாயிகள் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலையுடன் தெரிவித்தனர்.

இடி, மின்னலுடன் கனமழை

தலைவாசல் பகுதியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று பகல் வேளையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் சிறிது நேரத்தில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை, காற்று காரணமாக சிறுவாச்சூர், புத்தூர், ஊனத்தூர், வரகூர், சார்வாய்புதூர், தலைவாசல், மணிவிழுந்தான், காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றால் கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. மேலும் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சாய்ந்தன. மரங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இந்தநிலையில் மின்னல் தாக்கியதில் சார்வாய் கிராமத்தில் தென்னை மரத்தில் தீப்பிடித்தது. மேலும் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள், நேற்று பெய்த மழையால் சிறிது நிம்மதி அடைந்தனர்.

ஏற்காடு பூங்காவில் வெப்பத்தை தணிக்க விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடு

சேலம் மாவட்டம், ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் பல்வேறு வன உயிரினங்கள் பரமாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கோடை வெயிலில் இருந்து விலங்குகளை சமாளிக்க வனத்துறை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து குரும்பப்பட்டி வன சரக அலுவலர் உமாபதி கூறுகையில், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கோடை காலத்தையொட்டி வன விலங்குகள் வெப்பத்தை தடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூங்காவில் ஒரு பெரிய முதலையும், ஒரு குட்டி முதலையும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவைகள் இருக்கும் தொட்டியில் எப்போதும் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளன.

இந்த பூங்காவில் 24 கடமான்களும், 40 புள்ளி மான்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை வெயிலை அவைகள் சமாளிக்க பராமரிக்கப்படும் இடத்தில் 'ஸ்பிரிங் லிங்க் வாட்டர்' மூலம் காலை முதல் மாலை வரை தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதில் மான்கள் ஆனந்தமாக குளித்து விளையாடி வெயிலின் தாக்கத்தை குறைத்து வருகின்றன. பூங்காவில் உள்ள வெளிநாட்டு நீர்ப்பறவைகள், செங்கல் நாரை, சாம்பல் நிற நாரை, லவ்பேர்ட்ஸ் பறவைகள், கிளிகள் உள்ள கூண்டுகளுக்கு பசுமை போர்வை அமைக்கப்பட்டதுடன் சாரல் நீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

பூங்கா முழுவதும் மரங்களால் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருப்பதால், பூங்காவின் உள்ளே குளிர்ந்த சீதோஷ்ணமான நிலை காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தினமும் பூங்காவுக்கு படையெடுத்துள்ளனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு