சேலம் மாவட்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

சேலம் மாவட்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
X

சேலம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கு, கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Salem News Today: சேலம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கு, கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Salem News Today: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊராட்சிமன்ற பெண் தலைவர்களுக்கு, கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், சேலம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை தந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளில் 222 ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் உள்ளனர். ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் முழுமையாக தங்கள் ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள், கடமைகள், நடைமுறையில் உள்ள அரசு திட்டங்கள், திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். கிராம ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து ஊராட்சி மன்றத்தலைவர்கள் அறிந்திருப்பது மிகவும் அவசியமானதாகும்.

ஊராட்சியின் அனைத்து விதமான வருவாய், ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் செலவு, ஊராட்சியின் வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு தொகை போன்ற விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். மேலும், ஊராட்சியின் மிக முக்கியமாக நிறைவேற்ற வேண்டிய பணிகள், மழை காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், கோடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவை குறித்து ஊராட்சி மன்றத்தலைவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் சேவை மனப்பான்மையோடு குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஊராட்சியில் பொதுமக்களின் பிரச்சனைகளை ஊராட்சி மன்ற பெண் தலைவரான உங்களால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். அதனை ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு எளிதில் எடுத்துச் சென்று உடனடியாக தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது கிராம ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்படும் இணையவழி வரி வசூல், இணையவழி மனைப் பிரிவு ஒப்புதல் வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற முக்கியத் திட்டங்கள் தொடர்பான நடைமுறைகளைத் தெளிவுப்படுத்தி, அன்றாட நிர்வாகத்தை எளிய முறையில் எடுத்துச் செல்ல அரசின் முனைப்பு முயற்சிகளுக்கு ஊராட்சிமன்றத் தலைவர்கள் தங்களது ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்.

தமிழ்நாடு அரசால் ஆண்டுக்கு 6 முறை நடத்தக்கூடிய கிராம சபைக்கூட்டங்களை முறையாக வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், தெருவிளக்கு பராமரிப்பு, ஊராட்சி சாலைகள் மேம்பாடு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீரினை அனைவருக்கும் வழங்குதல், ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் ஆகியவற்றை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்த ஊராட்சியாக தங்களது ஊராட்சிகள் அமைவதற்கு ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் செயல்பட வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி சமமாகக் கிடைத்திடுவதை தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர்கள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மகளிர் திட்டம், சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித்துறை, சமூக பாதுகாப்புத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் ஊராட்சிமன்ற பெண் தலைவர்களுக்கு எடுத்துரைத்தனர். முன்னதாக, ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் தங்களது ஊராட்சிகளில் உள்ள அடிப்படைக் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், உதவி ஆட்சியர் பயிற்சி சங்கீத் பல்வந்த் வாகி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெ.பெரியசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சௌ.தமிழரசி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் அ.மயில், துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) மரு.எஸ்.சவுண்டம்மாள், மரு.பு.இரா.ஜெமினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளா தேவி உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story