மத்திய அரசை கண்டித்து சேலம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து சேலம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காடையாம்பட்டி

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க கோரியும், வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீவட்டிப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காடையாம்பட்டி மேற்கு வட்டார தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய கவுன்சிலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காடையாம்பட்டி கிழக்கு வட்டார தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மேலும் இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ், நகரத் தலைவர் ஹரிசந்திரன், கிராம கமிட்டி தலைவர் பழனி தேவன், நிர்வாகிகள் பெருமாள், தர்மலிங்கம், மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்காடு

ஏற்காட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஏற்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்ஆனந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தாரமங்கலம்

தாரமங்கலம் சந்தைப் பேட்டை அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு தாரமங்கலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு. மாவட்டத் துணைத் தலைவர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதி செல்வம், நிர்வாகிகள் லக்ஷ்மன், தட்சிணாமூர்த்தி, மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்ககிரி

சங்ககிரியில் உள்ள ஸ்டேட் பேங்க் முன்பு சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்குமார் தலைமை வகித்தார். சங்ககிரி வட்டார தலைவர் சரவணன், நகர தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், மாவட்ட பொது செயலாளர்கள் நடராஜன், பழக்கடை ராமமூர்த்தி, சின்னுசாமி, மூத்த நிர்வாகிகள் அங்கமுத்து, ஆறுமுகம், இஸ்மாயில், காமராஜ், சந்திரன், ஜெகநாதன், பஸ் ஆறுமுகம், விஸ்வநாதன், கிரி, ரவி, பரமன், மளிகை குமார், மாணவர் காங்கிரஸ் அகில், வெர்ஸிலி, இளைஞர் காங்கிரஸ் கார்த்தி, தேவூர் நாகேந்திரன், பொன்சித்தையன், அரசிராமணி ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து துண்டுப் பிரசுரத்தை கிராமப்புற மக்களிடையே விநியோகித்தனர்.

Tags

Next Story