சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் கார்மேகம்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 421 மனுக்கள் வரப்பெற்றன.
மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 18 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சிர் தெரிவித்தார்.
முன்னதாக சேலம் மாவட்டத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு மாதிரிப் மேல்நிலை பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயின்ற செம்மொழி அரசி, எஸ். சங்கீதா, எஸ். சிவஷாலினி ஆகிய மூன்று மாணவிகள் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உயர்கல்வி (BA ECONOMICS) பயில்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் உதவி கோரியிருந்தனர்.
இக்கோரிக்கையின் அடிப்படையில் சேலம் கல்வி அறக்கட்டளை நிதியிலிருந்து மூன்று மாணவிகளுக்கும் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயில மூன்று வருடங்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் என் மொத்தம் ரூ.8,10,000/- க்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா.சிவக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. கபீர் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu