சேலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஆய்வு செய்த கலெக்டர்

சேலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஆய்வு செய்த கலெக்டர்
X

சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார்.

நடப்புக் கல்வி ஆண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு இன்று (13.03.2023) தொடங்கியுள்ளதையொட்டி, தேர்வுகள் நடைபெறும் மையங்களில் ஒன்றான சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 2022-2023-ஆம் கல்வியாண்டில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 13.03.2023 முதல் 03.04.2023 முடிய உள்ள நாட்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 தேர்வர்கள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.

இத்தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 11 குழுக்களைக் கொண்ட 33 பறக்கும் படையினர், 215 நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், தேர்வுப் பணியாளர்கள் என பல்வேறு நிலைகளிலும் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், முன்னதாக பொதுத்தேர்வு நடத்தப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதியினை ஏற்பாடு செய்திடவும், தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திடவும், தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும். தலைமை ஆசிரியர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் அன்றாடம் நம்பிக்கை அளித்து தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை வாழ்த்தியும், ஊக்கப்படுத்தியும் அனுப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் ஒரு தேர்வு முடிந்த பின், அதைப்பற்றிய சிந்தனைகளைத் தவிர்த்து அடுத்தடுத்த தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் தேர்வு நேரங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளைப் போதிய நேரம் தூங்க வைத்து, சத்தான உணவுகளை வழங்கி, அவர்களை வாழ்த்தி, ஊக்கப்படுத்தி தேர்வு எழுத அனுப்பிட வேண்டும். பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் இரா.முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil