டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கார்மேகம்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடுகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 445 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் தூய்மையாக இருப்பதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்வதுடன் தங்கள் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைப் பணிகள் நடைபெற்று வருவதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, னித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu