சேலத்தில் ஆட்சியர் தலைமையில் காலநிலை மாற்ற இயக்க கருத்தரங்கு
சேலத்தில் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் காலநிலை மாற்ற இயக்க கருத்தரங்கு நடைபெற்றது.
சேலத்தில் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் காலநிலை மாற்ற இயக்க கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு தொலைநோக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இம்முயற்சிப் பாதையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.
பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றதைக் குறைப்பதற்கான திட்டங்களை வகுத்தல், பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரித்தல், பசுமையான ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டின் மூலம் உமிழ்வைக் குறைப்பதற்கான உத்திகளை மேம்படுத்துதல் ஆகியவை காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய இலக்காகும்.
வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 12 இலட்சம் மரக்கன்றுகள் ஆண்டுதோறும் நடவேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தின் நிலப்பரப்பை 33 சதவிகிதம், அதாவது மூன்றில் ஒரு பங்காக உயர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிக அளவில் பசுமை சார்ந்த ஆற்றல் இயக்கங்களை உருவாக்கிடவும், சூரிய சக்தி ஆற்றல், மரபுசாரா ஆற்றல் போன்றவற்றை உருவாக்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிக்க சேலம் மாவட்டத்தில் 1,000 ஏக்கர் நிலம் கண்டறிந்து மின்சார வாரியத்திற்கு வழங்கிடும் வகையில், இதுவரை 238 ஏக்கர் நிலம் மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள நிலங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
வீடுகள் மற்றும் கடைகள் தோறும் சூரிய சக்தி ஆற்றல் கொண்டு வரவும், சேலம் மாவட்டத்தினை பசுமை ஆற்றல் தயாரிக்கும் மாவட்டங்களில் முதன்மையான மாவட்டமாக உருவாக்கிடவும் சேலம் மாவட்ட நிர்வாகம் விரிவான புரிதலோடும், திட்டங்களோடும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றதைக் குறைப்பதற்கான முயற்சியில் உள்ளது.
ஒவ்வொரு துறையும் தங்களுடைய பங்களிப்பாக என்ன செய்யலாம் என்பதைப் புரிந்துகொண்டு கூட்டு முயற்சியாக இணைந்து செயல்பட்டு நம் குறிக்கோளை அடைய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி, தமிழ்நாடு காலநிலை மாற்றப் பணி உதவி திட்ட இயக்குநர் மனிஷ் மீனா, உதவி வனப் பாதுகாப்பு அலுவலர் (பயிற்சி) மாதவி, பூவுலகின் நண்பர்கள் உட்பட தொடர்புடையத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu