சேலம் மாவட்டத்தில் நாளை 9 இடங்களில் "மக்களுடன் முதல்வர்" முகாம்கள்

சேலம் மாவட்டத்தில் நாளை 9 இடங்களில்  மக்களுடன் முதல்வர் முகாம்கள்
X

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்.

சேலம் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் நாளை 9 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

சேலம் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் நாளை 9 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "கள் ஆய்வில் முதலமைச்சர்" என்ற முன்னெடுப்பின் நீட்சியாக, அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொது மக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் "மக்களுடன் முதல்வர்" "இல்லம் தேடி சேவை" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு, திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெற முதற்கட்டமாக அனைத்து மாநகர, நகர, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திட வலியுறுத்தி அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழ்நாடு அரசால் அரசாணை வெளிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள், அதாவது வருவாய்த்துறை, நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை. மாவட்ட தொழில்மையம் மற்றும் தொழிலாளர் நலத்துறை (நலவாரியம்) போன்றவையாகும்.

இந்த முகாமில் ஒருங்கிணைக்கப்படும் 13 துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் விவரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். முகாம் நடைபெறும் இடத்தில் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் 13 துறைகளின் சார்பில் மனுக்களை பெற துறைவாரியாக தனித்தனி மேசைமுகப்பு (COUNTER DESK) அமைக்கப்பட்டிருக்கும். இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டிய மனுக்களுக்கு முகாமிலேயே தனியாக மூன்று மேசை முகப்பில் (COUNTER DESK) இ-சேவை மையம் செயல்படும்.

இந்த முகாமில் செயல்படும் இ-சேவை மையங்களில் வழக்கமாக பெறப்படும் சேவைக்கட்டணத்தில் 50% மட்டும் பெற்றுக் கொள்ளப்படும். இந்த முகாமானது முற்பகல் 10.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.00 மணி வரை செயல்படும். முகாமின் போது பெறப்படும் மனுக்களின் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

சீர்மிகு இத்திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக மாநகர, நகர, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் சிறப்புடன் செயற்படுத்திட 18.12.2023 முதல் 06.01.2024 வரை 16 வேலை நாட்களில் 142 முகாம்களை நடத்த 142 உரிய இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, குறைகளுக்கிடங்கொடா வண்ணம் முகாம்களை சீரிய முறையில் நடத்திட முகாம் கண்காணிப்பு அலுவலர்கள் (NODAL OFFICERS) மற்றும் முகாம் பொறுப்பு அலுவலர்கள் (INCHARGE OFFICERS) நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் வார்டு 2 பகுதிக்குட்பட்ட அம்மாபாளையம் மேல்நிலைப் பள்ளி, அஸ்தம்பட்டி வார்டு 4 பகுதிக்குட்பட்ட 6வது குறுக்கு வாட்டர் போர்டு காலனியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கம், அம்மாபேட்டை வார்டு 10 பகுதிக்குட்பட்ட வீராணம் பிரதான சாலையில் உள்ள மாதையன் மண்டபம் மற்றும் கொண்டலாம்பட்டி வார்டு 46 பகுதிக்குட்பட்ட குகை காளியம்மன் கோவில் மண்டபத்தில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

மேலும், மேட்டூர் நகராட்சி, மேட்டூர் வார்டு 1, 2, 3, 13, 14, 15 பகுதிகளுக்குட்ட பொன்னகர் நகராட்சி தொடக்கப் பள்ளி, மேட்டூர் வார்டு 4, 11, 17, 18, 19, 20 பகுதிகளுக்குட்ட தூக்கணம்பட்டி நகராட்சி தொடக்கப் பள்ளி, கொளத்தூர் பேரூராட்சியில் லட்சுமி திருமண மண்டபம் மற்றும் பேளூர் பேரூராட்சியில் பேளூர் சமுதாயக் கூடம் மற்றும் மாசிநாயக்கன்பட்டி கஸ்தூரிபாய் திருமண மண்டபம் என மொத்தம் 9 இடங்களில் இரண்டாவது நாளான நாளைய தினம் 19.12.2023 "மக்களுடன் முதல்வர்" திட்டம் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் 142 இடங்களின் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, உரிய விளம்பரம் நகராட்சி நிருவாகத்துறை மற்றும் ஊரகவளர்ச்சித்துறையால் செய்யப்பட்டுள்ளது. மாநகர, நகர, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முகாம் நடைபெறும் நாட்களை அறிந்து முகாமில் ஒருங்கிணைக்கப்படும் 13 துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பெற தமிழ்நாடு அரசின் செம்மை மிக்க இத்திட்டத்தினைப் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா