சேலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்..

சேலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்..
X

நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் கலந்துரையாடினார்.

நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் கலந்துரையாடினார்.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய 'நான் முதல்வன்' என்கிற புதிய திட்டத்தை 1.3.2022 அன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித் திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த நிலையில், சேலத்தில் இன்று கள ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். “நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயிற்சிகள் பெற்றுவரும் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் முதல்வருடன் விரிவாக பேசினர்.

இந்தத் திட்டத்தின் மூலம் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான cloud Computing. Data Analytics, Machine Learning, BIM Modelling, High Rise Building, Steel Structures, Electric Vehicle Charging System Design, Artificial Intelligence, Robotics போன்ற திறன் பயிற்சிகள் பெற்ற அனுபவத்தையும், அவை அவர்களுடைய வேலை வாய்ப்பிற்கு எவ்வாறு பயன்பெற்றது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

பன்னாட்டு நிறுவனங்களான IBM, Microsoft, TCS, Infosys, Google, AWS, L&T போன்றவற்றுடன் இணைந்து உலகத் தரத்திலான பயிற்சிகளை கட்டணமின்றி கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் அமைந்த "நான் முதல்வன்” திட்டம், கல்வி பயிலும் பருவத்திலேயே பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்தது குறித்தும் மாணவ, மாணவிகள் முதல்வரிடம் விவரித்தனர்.

மேலும், படிக்கும்பொழுதே உயர்தொழில்நுட்பம் சார் தொழில் முனைவை ஊக்குவித்தும், அதன்மூலம் அவர்களுடைய பொருளாதாரம் மேம்படவும், வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகத்திற்கு ஏற்ற திறன் பயிற்சிகளை “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வழங்குவதன் மூலம் மாணவ சமுதாயத்திற்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலின்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story