சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்ய அழைப்பு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை அறிய அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை அறிய அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்ததாவது:
மகளிர் உரிமைத் திட்டம் கடந்த 15.09.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் கள ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத்தொகை செலுத்தப்பட்டு, கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் சந்தேகங்களைப் போக்கும் வகையில் உதவி மையங்கள் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் அவர்களது கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது. குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வாயிலாக மேல்முறையீடு செய்யலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரம் அறிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், தகுதியானவர் எனக் கருதும்பட்சத்தில் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர் மூலமாகவோ மேல்முறையீடு செய்யலாம். அதன்படி, மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உரிய தகவல்களை வழங்கிட அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மையங்கள் மூலம் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu