சேலத்தில் பா.ஜ., மகளிர் அணியின் போராட்டம்

மதுக்கடையில் முதல்வர் படம் ஒட்ட முயன்ற பா.ஜ.,வினர் கைது
சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று வந்த பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணியினர் "போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும் அப்பா" எனும் வாசகத்துடன் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்ட முயன்றனர். டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதைக் கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலம் டவுன் போலீசார் அவர்களை தடுத்தபோதும், மகளிர் அணியினர் கோஷம் எழுப்பி தொடர்ந்து முதல்வர் படத்தை ஒட்ட முயன்றதால், சேலம் மாநகர பா.ஜ.க. மகளிர் அணி தலைவி சுமதிஸ்ரீ உள்ளிட்ட மகளிர் அணியினர், அஸ்தம்பட்டி மண்டல தலைவர் சந்தோஷ், முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஆத்தூர் அருகே வளையமாதேவி டாஸ்மாக் கடை முன்பு, பா.ஜ.க.வைச் சேர்ந்த ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தலைவர் அமுதா தலைமையில் கட்சியினர் "அப்பா ஸ்டாலின் டாஸ்மாக் கடையில் ரூ.1,000 கோடி ஊழல்" என குறிப்பிடப்பட்ட முதல்வர் படத்தை மாட்டினர். ஆத்தூர் ஊரக போலீசார் படத்தை அகற்ற முயன்றபோது போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் முதல்வர் படம் மற்றும் சுவரொட்டியை போலீசார் அகற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu