பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் இருப்பு: அமைச்சர் நேரு
தமிழ்நாட்டில் பொதுமக்களுக்குத் குடிநீர் தேவையான அளவு இருப்பில் உள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (02.10.2023) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
குடிநீர் தேவையைப் பொறுத்தவரையில் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பியுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து கடலுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. சென்னை மிக மிக பாதுகாப்பாக இருக்கிறது. மேலும், சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் குடிநீருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை.
அதேபோன்று, கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இன்னும் 15 நாட்களுக்குள் குடிநீர் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது. மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, கன்னியாகுமரி பொறுத்தவரை ஏற்கனவே ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகள் மற்றும் பழுதுகளை அலுவலர்கள் உடனுக்குடன் சீரமைத்து வருகின்றனர். சீரான குடிநீர் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவதை அலுவலர்கள் மூலம் உறுதிசெய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் குடிநீர் பிரச்சனைக்கு இடமில்லை. காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் மழை குறைவாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காவிரி குடிநீர் பகுதிகளுக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மேட்டூர் அணையில் தேவையான குடிநீர் இருப்பு வைத்துள்ளார்கள்.
தாமிரபரணியில் மழை குறைந்த காரணத்தால் ஒரே ஒரு நாள் வறண்ட நிலை ஏற்பட்டது. ஆனாலும், மறுநாளே மழை பெய்ததால் தாமிரபரணி பகுதியில் முழுமையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வானிலை நிபுணர்கள் குறிப்பிடுகையில், தென்மேற்கு பருவமழை காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் மட்டுமே மழை பெய்யாமல் உள்ளது எனவும், மற்ற இடங்களில் தென்மேற்கு பருவமழை 10 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்கு மேல் இருக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் முழுமையான மழைப்பொழிவு இருக்கும் எனவும் வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, மழை பெய்யாமல் இருந்தாலும், இன்னும் ஓராண்டு காலத்திற்கு தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது எந்த இடத்திலும் இருக்காது.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்ஆகியோர் காவிரி நீர் பெறுவது தொடர்பாக முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு ஏற்கனவே இதற்கென கூட்டங்கள் கூட்டப்பட்டு, அலுவலர்களுக்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu