தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..
சேலம் ஆத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளதாகக் கூறியும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. அதை யாராலும் அசைக்கவும் முடியாது. நுழையவும் முடியாது. நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். மழையிலும், வெயிலிலும் விவசாயத்தில் உழைத்தவன். தற்போது மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற திமுக ஆட்சியைக் கண்டித்து மக்கள் போராட திரண்டதற்கான இது ஒரு சான்றாக அமையும்.
முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா நடைபெறுகிறது. உதயநிதி ஸ்டாலின் இந்த நாட்டுக்கு உழைத்தவரா? இல்லை இந்த மக்களுக்கு என்ன செய்தார். அவர் அமைச்சரானால் பாலாறும், தேனாறும் ஓடுமா? கருணாநிதி மகன் ஸ்டாலின் அதன் பிறகு ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழையடி வாழையாக குடும்ப ஆட்சி செய்வதற்கு இதுவே ஒரு உதாரணம்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் மெகா ஊழல் நடக்கிறது. அதிமுகவில் சாதாரண தொண்டர்கள் கூட பதவிக்கு வர முடியும். திமுகவில் அவர்களுக்கு யார் வேண்டுமோ அவர்கள் மட்டுமே பதவியில் அமர்த்துவார்கள். கடந்த 19 மாத கால ஆட்சியில் திமுக மக்கள் விரோத ஆட்சியை மட்டுமே செய்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளை எதுவும் திமுக அரசு செய்யவில்லை. அனைத்து குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தி வழங்குவதாகவும், கல்வி கடன், பெட்ரோல், டீசல் விலை, முதியோர் உதவித்தொகையை ரூ.1500 ஆக உயர்த்தி தருவதாகவும் சொன்னார்கள். அந்த வாக்குறுதிகள் எல்லாம் எங்கே போச்சு?.
திராவிட மாடல் ஆட்சியில் கமிஷன், கலெக்சன், கரப்சன். இதுதான் திராவிட மாடலா. கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் தலைவாசல் ஆட்டுப்பண்ணையில் ஆயிரம் கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழாவும் நடைபெற்றது. ஆனால், இன்னும் திமுக அரசு முறையாக அதை நடைமுறைப்படுத்தவில்லை.
ஆத்தூர் நகராட்சியில் அனைத்து திட்டங்களையும் அதிமுக ஆட்சியில் மட்டுமே செய்து கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை மட்டுமே திமுக அரசு திறந்து வைக்கிறார்கள். யார் பெற்ற பிள்ளைக்கு யாரோ பெயர் சூட்டுவது போல் திமுக ஆட்சி செய்து வருகிறது. தற்போது பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக கடலுக்கு செல்கிறது. ஆங்காங்கே நீரை தேக்கி வைக்க தற்போதைய ஆட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை திமுக மாவட்ட செயலாளர் போல் நடத்துகிறார்கள். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் விரோத திமுக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பப்புவார்கள். திமுக அரசு சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உள்ளிட்ட வரி உயர்வை உடனடியாக குறைத்திட வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu