சேலம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கான நெசவு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பைல் படம்
சேலம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மான்யக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் (Young Weavers Induction and Entrepreneurship Programme for Youngsters) ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு 04.08.2023-ல் ஆணை வெளியிட்டுள்ளது.
இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்குதல் (அல்லது) தொழில் முனைவோர்களாகவும், பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவதாகவும், கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பித்தல் இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாகும்.
மேலும், வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத் தொழில் தொடர்பாக குறுகியகால பயிற்சி அளித்தல், 2023-24-ல் முதற்கட்டமாக 300 இளைஞர்களை இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தல், கைத்தறி நெசவில் நெசவுத் தொழில் நுட்பங்களை பயிற்சியின் வாயிலாக கற்பித்தல், இப்பயிற்சியின் வாயிலாக கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும் அளவையும் மேம்படுத்துதல், பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் பயிற்சி காலம் முடிய ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் விண்ணப்பிக்க 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இப்பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.loomworld.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திட வேண்டும்.
மேலும், இப்பயிற்சி தொடர்பாக 12.09.2023 அன்று நங்கவள்ளி வனவாசி பகுதியில் கிழக்கு வனவாசி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்திலும், 13.09.2023 அன்று சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் ஜே.ஓ.கொண்டலாம்பட்டி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்திலும் 14.09.2023 அன்று சேலம் அக்ரஹாரம் பகுதியில் சூபர் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திலும், சின்னனுர் பகுதியில் சின்னனூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்திலும் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu