சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட சிறப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட சிறப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
X

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த சிறப்பு விழிப்புணர்வுக் கூட்டம்.

சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த சிறப்பு விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த சிறப்பு விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசின் மூலமாக பட்டியலின மற்றும் பழங்குடி இன தொழில் முனைவோருக்காக, பிரத்யேக சிறப்புத் திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் 2023-2024 (Annal Ambedkar Business Champions Scheme - AABCS) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி, சேவை வணிக நிறுவனங்கள் தொடங்க, விரிவுபடுத்த இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்காக 35 விழுக்காடு மூலதன மானியம் மற்றும் கடன்களுக்கு 6 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான தகுதி பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் இனத்தவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதிகள் எதுவும் இல்லை. வயது வரம்பு 18 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்.

மேலும், உற்பத்தி சேவை தொழில்களான குளிர்பதன கிடங்குகள், விவசாயம் சார்ந்த வாகனங்களை வாடகைக்கு விடுதல், ஆடு, மாடு மற்றும் கோழிப்பண்ணை, பட்டுப்புழு தயாரித்தல், கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், பெட்ரோல் பங்குகள், சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் மற்றும் வியாபாரம் போன்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன.

எனவே, ஆர்வமுள்ள பட்டியலின மற்றும் பழங்குடி இன தொழில்முனைவோர்கள் இந்த சிறப்புத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று தங்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்குவோர்கள் மற்றும் ஏற்கெனவே செய்து வரும் தொழிலினை விரிவாக்கம் செய்வோர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார், தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தலைவர் மாரியப்பன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தர்., மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் நாகராஜன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!