திட்டக்குழு உறுப்பினர்களாக அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
சேலம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி பகுதியில் இருந்து 10 பேரும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இருந்து 8 பேரும் என திட்டக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் கடந்த 10ம் தேதி முடிவடைந்தது. இதில், ஊரக பகுதிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேரும், திமுகவை சேர்ந்த 6 பேரும், பாமக. வை சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 18 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 12-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. நேற்று வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும்.
இந்தநிலையில் திமுக மற்றும் பாமகவை சேர்ந்த வேட்பாளர்களுக்கு மாவட்ட ஊராட்சி குழுவில் உரிய மெஜாரிட்டி இல்லை. இதனால் அ. தி. மு. க. வை சேர்ந்த வேட்பாளர்களான மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன் (28-வது வார்டு), ராஜா (29-வது வார்டு), ராஜேந்திரன் (12-வது வார்டு), சந்திரசேகரன் (4-வது வார்டு), சாந்தாமணி (14-வது வார்டு), சின்னுசாமி (11-வது வார்டு), தங்கமணி (24-வது வார்டு), தில்லைக்கரசி (20-வது வார்டு), பழனிசாமி (16-வது வார்டு), மல்லிகா (8-வது வார்டு) ஆகிய 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேர்தல் நடத்தும் அலுவலரும், மகளிர் திட்ட அலுவலருமான பெரியசாமி வழங்கினார்.
இதனிடையே, மீதமுள்ள 8 மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. அதில், சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர் என்றும், அதன்பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu