சேலத்தில் சட்டம், ஒழுங்கு குறித்த வாராந்திர ஆய்வுக் கூட்டம்
சட்டம், ஒழுங்கு குறித்த வாராந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.
சட்டம், ஒழுங்கு குறித்த வாராந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு குறித்து காவல்துறை மற்றும் அரசுத் துறை அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (08.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் வருவாய்த்துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இக்கூட்டத்தில் கடந்த வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டம், ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில், பொதுமக்கள் அதிகம் வந்துசெல்லும் இடங்களான புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் தற்காலிகக் கடைகள் அனுமதியின்றி நடத்தப்படுவதாகவும், இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் வரப்பெற்ற புகார் மனுக்களின் மீது மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, சேலம் பழைய பேருந்து நிலையம் தரை தளத்தில் இருந்து பேருந்துகள் வெளியில் வரும் இடத்தில் அதிகளவிலான ஆட்டோக்களை நிறுத்தி போக்குவரத்துக்கு தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வாகன நிறுத்துமிடங்களில் இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் போதிய அளவில் கண்காணிப்புக் கேமிராக்களைப் பொருத்துவதுடன், பாதுகாப்பு பணியில் தேவைக்கேற்ப கூடுதல் பணியாளர்களை அமர்த்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக செல்வது கண்டறியப்பட்டால் பாதுகாப்பு நலன் கருதி வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காவல் துறையினர் வழக்கமாக மேற்கொள்ளும் இரவு ரோந்துப் பணிகளை முறையாகக் கண்காணிப்பதுடன், குடியிருப்போர் நல சங்கங்களுடன் இணைந்து அவர்கள் பகுதியில் தேவைக்கேற்ப கண்காணிப்புக் கேமிராக்களை பொருத்தி உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சட்டம், ஒழுங்கு தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாநகர காவல் துணை ஆணையர்கள் பிருந்தா, மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், வருவாய்த்துறை, காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu