மாற்றுத்திறனாளி மாணவிக்கு ரூ.2.48 லட்சம் மதிப்பில் அரசின் சார்பில் வீடு

மாற்றுத்திறனாளி மாணவிக்கு ரூ.2.48 லட்சம் மதிப்பில் அரசின் சார்பில் வீடு
X

மாற்றுத்திறனாளி மாணவி அமுதாவுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு கட்டி வழங்குவதற்கான ஆணையினை வழங்கும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.

சாலை விபத்தில் பெற்றோர்களை இழந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு ரூ.2.48 லட்சம் மதிப்பில் அரசின் சார்பில் வீடு கட்டி வழங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் பெற்றோர்களை இழந்த மாற்றுத்திறனாளி மாணவி அமுதாவுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு கட்டி வழங்குவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று (03.07.2023) மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகில் உள்ள கல்பாரப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி வெ.அமுதா அவர்களின் பெற்றோர்கள் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து, சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாணவி வெ. அமுதா அவர்களுக்குத் தேவையான உதவிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில், இன்றைய தினம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி வெ.அமுதா அவர்களுக்கு அரசின் சார்பில் முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2,48,460/- மதிப்பிலான வீடு கட்டி வழங்குவதற்குரிய ஆணை வழங்கப்பட்டது. வீடு கட்டும் இப்பணிகள் அரசின் சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் உடனடியாக தொடங்கப்படவுள்ளது.

மேலும், மாணவி வெ. அமுதா அவர்களுக்கு கல்லுாரி அட்மிஷன், கல்விச் செலவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவைகளை தமிழ்நாடு அரசின் சார்பில் சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்று அவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story