குறைமாதத்தில் குழந்தையை பெற்ற சிறுமி பரிதாப உயிரிழப்பு

குறைமாதத்தில் குழந்தையை பெற்ற சிறுமி பரிதாப உயிரிழப்பு
X

பைல் படம்.

Salem News Today: திருமணமாகாமல் குறைமாதத்தில் குழந்தையை பெற்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர், இந்திராநகரில் வசித்து வரும் உறவினரான இளைஞர் நெருங்கி பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளார்.

சிறுமியின் பெற்றோருக்கு இதுகுறித்து தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தனது மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிட்டு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வாழப்பாடியில் உள்ள டாக்டர் செல்வாம்பாள் ராஜ்குமார் என்பவரின் தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை நேற்று முன்தினம் இரவு அழைத்துசென்றுள்ளனர்.

அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் செல்வாம்பாள், தற்போது 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டது. இந்த கருவை கலைக்க முடியாது என்பதால், பிரசவ முறையில் சிகிச்சை அளித்து, சிறுமியின் வயிற்றில் இருந்த குறை மாத குழந்தையை பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது.

பிரசவத்தின்போது, அந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை கண் விழிக்காததால் இறந்து விட்டதாகக் கருதி அங்கிருந்த பிளாஸ்டிக் தொட்டியில் மருத்துவமனையின் பணியாளர்கள் வீசி விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே குழந்தையை பிரசவித்த பின் சிறுமிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக டாக்டர்கள் வாழப்பாடி போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சேலம் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ஜெயசெல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர், பெண் டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் திருமணமாகாத 17 வயது சிறுமிக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரசு தலைமை டாக்டர் ஜெயசெல்வி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு, பிரசவம் பார்த்த பெண் டாக்டர் மீதும், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபர் மீதும் நடவடிக்கை எடுக்க வாழப்பாடி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உமாசங்கர், தனலட்சுமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். திருமணமாகாமல் கர்ப்பமான 17 வயது சிறுமி குறைமாதத்தில் குழந்தையை பிரசவித்த சில மணி நேரத்தில் திடீரென பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு