அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் "மக்களுடன் முதல்வர்" : உதயநிதி ஸ்டாலின்
"மக்களுடன் முதல்வர்"அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேரும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள "மக்களுடன் முதல்வர்" திட்டம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான மகத்தானதிட்டமாகும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தினை இன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தினை இன்று (18.12.2023) சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
முதலமைச்சர் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேரும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள "மக்களுடன் முதல்வர்" திட்டம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான மகத்தான திட்டத்தினை இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் கண்டறியப்பட்டு, அத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி ஒரே இடத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக "மக்களுடன் முதல்வர்" திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளைச் சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் இத்திட்டம் முதற்கட்டமாக சிறப்புடன் செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் முதற்கட்டமாக 1,745 சிறப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் சேர்க்கப்பட்டுள்ள 13 துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் விவரங்கள் பொதுமக்களின் பார்வைக்காக முகாம் நடைபெறும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இம்முகாம்கள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் 13 துறைகளின் சார்பில் மனுக்களை பெற துறைவாரியாக தனித்தனி மேசை முகப்புகள் பொதுமக்களின் மனுக்களைப் பெறுவதற்கான அதற்குரிய அலுவலர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இம்முகாம்களில் இணையவழியிலும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று 18.12.2023 முதல் 06.01.2024 வரை 16 நாட்களில் 142 முகாம்களை நடத்த உரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. இம்முகாமானது காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்ய முகாம் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் முகாம் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இம்முகாமில் கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம். இவ்வாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, சேலம், தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் இன்று காலையில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் 5 நபர்களுக்கு விலையில்லா மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கருவிகள், மடக்கு நாற்காலியும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் 5 நபர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது.
மேலும், தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறையில் இயற்கை மரண நிவாரணத் தொகை ஒரு நபருக்கும், கூட்டுறவுத் துறையில் தொழில்முனைவோர் கடனுதவி மற்றும் சிறுதொழில் கடனுதவி 5 நபர்களுக்கும், வருவாய்த்துறையில் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ்கள் நபர்களுக்கும், மின்சாரத் துறையில் மின் இணைப்புப் பெயர் மாற்றம் 4 நபர்களுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சொத்து வரி பெயர் மாற்றம் 7 நபர்களுக்கும் என மொத்தம் 32 நபர்களின் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், மாநகராட்சி ஆணையாளர் சீ. பாலச்சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu