சேலம் சரகத்தில் கடந்த 9 மாதத்தில் நடந்த விபத்தில் 631 பேர் உயிரிழப்பு
பைல் படம்
சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதே போல மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் விபத்தை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஓமலூர் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா, காவல் ஆய்வாளர் செல்வராஜன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை விபத்து நடந்த இடங்களை ஆய்வு செய்தனர். அங்கு விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் கூறியதாவது:-
சேலம் சரகத்தில் ஓமலூர், மேட்டூர், சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்தூர், சங்ககிரி, தர்மபுரி என 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 60 ஆயிரத்து 462 இருசக்கர வாகனங்கள், 8 ஆயிரத்து 800 4 சக்கர வாகனங்கள், பேட்டரி வாகனங்களில் 4 ஆயிரத்து 268 இருசக்கர வாகனங்கள், 128 4 சக்கர வாகனங்கள் என போக்குவரத்து விதி மீறல்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 9 கோடியே 55 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் சேலம் சரகத்தில் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடந்த விபத்துகளில் 631 பேர் உயிரிழந்ததுடன் 4 ஆயிரத்து 118 பேர் காயமடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்கி விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu