ஏற்காட்டில் 46-வது கோடை விழா, மலர்க் கண்காட்சி துவக்கம்

ஏற்காட்டில் 46-வது கோடை விழா, மலர்க் கண்காட்சி துவக்கம்
X

ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்துவைத்து பார்வையிட்டனர்.

Salem News Today: ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியினை அமைச்சர்கள் இன்று தொடங்கி வைத்தனர்.

Salem News Today: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று (21.05.2023) தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது:

வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையில் ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் பதவியேற்றது முதல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. இதனால் சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறந்து விடுவதால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு கூடுதலாக 2 இலட்சம் டன் நெல் கிடைக்கிறது. நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தகுந்த துறையை நமது வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

குறிப்பாக, பாலமலை பகுதி மலைவாழ் மக்களின் 100 ஆண்டுகால கனவாக சாலை வசதி இருந்து வந்ததை அறிந்து, ரூ.31.53 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், கருமந்துறையில் உள்ள 2,000 குடும்பங்களுக்கு

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஏற்காட்டில் ரூ.11 கோடி செலவில் 3 கிணறுகள் வெட்டப்பட்டு தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 11.06.2023 அன்று சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்து ரூ.1,300 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு சேலம் மாவட்டத்திற்கு இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

இவ்விழாவில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் உள்வாங்கி வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்காட்டில் இன்றைய தினம் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நடைபெறும் ஏற்காடு மலர்க்கண்காட்சி வண்ண மலர்களைக் கொண்டும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டதால், ஏற்காடு ஊட்டியைப் போல் காட்சியளிக்கிறது.

இந்த ஆண்டின் வேளாண்மைத்துறை நிதிநிலை அறிக்கையில் ஏற்காடு தாவரவியல் பூங்காவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தாவர அலங்கார வடிவங்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மிளகு மரபணு வங்கி அமைப்பதற்காக ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 9,749 ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறைக்கு ஏற்காட்டில் 40 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைந்துள்ளது. தோட்டக்கலைத் துறையின் சார்பில் வாசனைப் பூண்டு, அவகோடா மற்றும் மிளகு பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. மேலும், ஏற்காட்டினுடைய மேம்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இக்கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்துத்தரப்பினரையும் கவரும் வகையில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னேஷன், ஜெர்பரா, ஆர்க்கிட் உள்ளிட்ட 5 இலட்சம் அரிய வகை வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களின் கண்களைக் கவரும் வகையில் டாலியா, மேரி கோல்ட், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் மலர்களைக் கொண்ட பத்தாயிரம் மலர் தொட்டிகள் இம்மலர்க்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சுற்றுலாத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர்கள் திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, இவ்விழாவில் வருவாய்த்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, தாட்கோ, மகளிர் திட்டம் மற்றும் கூட்டுறவுத் துறையின் சார்பில் 161 பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினருக்கு பத்திரிக்கையாளர்களுக்கான நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நாள்தோறும் சேலம், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் சார்பில் ஏற்காடு சூழலியல் சுற்றுலா பேருந்துகளை ஏற்காட்டில் அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்றைய தினம் 21.05.2023 முதல் 28.05.2023 வரை 8 நாள்கள் நடைபெறவுள்ளது. இக்கோடை விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil