சேலம், திருப்பூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
பைல் படம்
Salem News Today: சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், ஆவடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன், த/பெ. ஆனந்தன் (27) மற்றும் அவரது மனைவி பவித்ரா (வயது 24) ஆகியோர் எடப்பாடி வட்டம், பூலாம்பட்டி கிராமம், மொளப்பாறை என்ற இடத்தில் காவிரி ஆற்றில் 4-6-2023 அன்று மாலை குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளக்கோவில் கிராமம், மஜரா செம்மாண்டம்பாளையத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான குவாரியில் பணிபுரிந்து வந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (எ) ஜானகிராமன், த/பெ. காமராஜ் (வயது 37) என்பவர் 3-6-2023 அன்று எதிர்பாராதவிதமாக குவாரியில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த உயிரிழந்தவர்களின் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu