சேலம் மாவட்டத்தில் 18 முதல் 27ம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம்
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்.
சேலம் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956 ஆம் நாளை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பெறுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பெறவுள்ளது.
ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா கொண்டாட்டங்களின் நிகழ்வுகளாக கணினித் தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைத்திடுவதற்கு வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம், விழிப்புணர்வுப் பேரணி ஆகியவை நடைபெற உள்ளன.
தமிழ்நாடு அரசு, வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி / கல்லூரி மாணவர்கள், தமிழமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள் பொதுமக்கள் என அனைவரும் ஆட்சிமொழிச் சட்ட வார விழா நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu