ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக 18 புதிய வாகனங்கள்

ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக 18 புதிய வாகனங்கள்
X

புதிய வாகனங்களை வழங்கும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு.

ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக 18 புதிய வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக 18 புதிய வாகனங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:

கடந்த 2008-ஆம் ஆண்டில் முதன்முதலாக ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 22.4.2022 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

அதனடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களுக்கான புதிய வாகனங்கள் வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வரால் கடந்த 10.05.2023 அன்று தலைமைச் செயலகத்தில் சேலம் மற்றும் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கான இரண்டு புதிய வாகனங்கள் உட்பட 25 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 200 புதிய வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அந்தவகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில், மீதமுள்ள 18 ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக (பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், கொளத்தூர், நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் மகுடஞ்சாவடி) புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், அவ்வொன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளைக் கண்காணிக்க ஏதுவாக தற்போது 13 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் புதிய ஸ்கார்பியோ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் அரசு அலுவலர்கள் குழு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு செய்து அதனை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்த தனி கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல் பொதுமக்களும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ரேவதி ராஜசேகர், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், துணை மேயர் எஸ்.சாரதாதேவி மற்றும் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!