ஏர் ஹாரன் பயன்படுத்திய 117 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம்: சேலம் ஆட்சியர்
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் காவல்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் நடத்தப்படுகிறது.
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சேலம் மாநகரப் பகுதிகளில் கடந்த 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மட்டும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 66,568 நபர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 104 நபர்கள், செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டிய 994 நபர்கள், மது அருந்தி வாகனம் ஓட்டிய 766 நபர்கள், சாலை சிவப்பு சிக்னல்களை மீறி வாகனம் ஓட்டிய 170 நபர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் 4 சக்கர வாகனம் ஓட்டிய 2,137 நபர்கள் என சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 70,779 நபர்கள் மீதும், சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளில் 58,885 வழங்குகளும் என மொத்தம் 1,29,664 நபர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் வாகன உயிரிழப்பு விபத்துக்ளை ஏற்படுத்தியவர்கள் மற்றும் சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது சேலம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களால் மட்டும் 1,135 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் “ஏர் ஹாரன்” பயன்படுத்தினால் விதிமுறைகளின்படி ரூ.10,000/- அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 3 மாதங்களில் விதிகளை மீறி “ஏர் ஹாரன்” பயன்படுத்திய 117 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாலை விதி மீறல்களைக் கண்காணித்துப் பதிவு செய்திட கண்காணிப்புக் கேமராக்கள் அதிக அளவில் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளில் முறையாக வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திடும் வகையில் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள
அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான விபத்துக்கள் நெடுஞ்சாலைகளில் ஏற்படுகிறது. இவ்விபத்துக்களைத் தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ள முக்கிய இடங்களில் தற்காலிக தடுப்புகளும், நிரந்தர எச்சரிக்கைப் பதாகைகளும், வாகன ஓட்டிகள் அறியும் வண்ணம் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோடை காலத்தைக் கருத்திற்கொண்டு, சாலைப்பணிகள் நடைபெறும்போது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தொடர் விபத்துக்கள் ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் வருவாய் துறை ஆகிய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. “வேகத்தைக் குறைப்போம், விபத்தைத் தவிர்ப்போம், உயிரைக் காப்போம்” என்ற கருப்பொருளை மையமாக வைத்து சாலை விபத்துக்கள் இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்கிடும் வகையில் அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்துத் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.இரா. சிவகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.பி. லாவண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.ஜெகநாதன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ராஜராஜன், சுப்பிரமணியன், பாஸ்கர், கல்யாணக்குமார் உட்பட தொடர்புடையத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu