ரூ.6000 வெள்ள நிவாரணம்: நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. ஒரே நாளில் 73 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ளக்காடானது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நின்றது. சென்னை அண்ணாசாலையில் இருந்து புறநகர் பகுதி தெருக்களில் உள்ள சாலைகள் வரை ஏரி போல் காட்சியளித்தது.
புறநகர் பகுதிகளில் குறிப்பாக ஆவடி, திருநின்றவூர், பெருங்குடி, மடிப்பாக்கம், முடிச்சூர், பள்ளிக்கரணை பகுதிகளில் வசித்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள் வசித்த வீடுகளுக்குள் எல்லாம் தண்ணீர் புகுந்தது. 4 அடி, 5 அடி வரை தண்ணீர் வீடுகளுக்குள் தேங்கி இருந்ததால் வீட்டில் இருந்த வாஷிங் மெஷின், பிரிட்ஜ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பீரோ, மேஜை உள்ளிட்ட தளவாட பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி கடுமையாக சேதம் அடைந்தன. மாடி வீட்டில் குடியிருக்கும் வசதி உள்ளவர்கள் மாடிக்கு பொருட்களை எடுத்துச்சென்று தண்ணீரில் சேதம் அடையாமல் காப்பாற்றினார்கள்.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே நிவாரண பொடுட்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. படகு மூலமும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் சுமார் 10 நாட்களுக்கு பின்னர் வெள்ளம் ஓரளவு வடிய தொடங்கியதால் தற்போது சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது. வெள்ள நிவாரண உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியலை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தயாரித்தனர். பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 17ஆம் தேதி ரூ. 6000 வெள்ள நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சென்னை மாவட்டத்தை பொருத்தவரை அனைத்து தாலுகாக்களில் வசிப்பவர்களுக்கும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu