அ.தி.மு.க ஆட்சியில் ரூ.811 கோடி முறைகேடு: 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்...!
கோவை மாநகராட்சி பழமையான அலுவலகம்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ரூ.811 கோடிக்கு ெடண்டர் விட்டதில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை மற்றும் கோவையில் சாலைகள் அமைக்க டெண்டர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒரு நிறுவனத்திற்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டது எனவும், 2017-2018ல் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணியமர்த்தியது தொடர்பான டெண்டரிலும் முறைகேடு நடந்துள்ளது. எனவும் இதற்காக மேலும் நிறுவனத்திற்காக டெண்டர் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேலுமணியின் வீடுகள், அவரது உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இதில், ரூ.811 கோடி டெண்டர் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இந்த முறைகேட்டுக்கு துணை போன அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகாரில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகளையும் இந்த வழக்கில் சேர்க்க லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வழக்கில் சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கருதுகின்றனர். ஏற்கனவே, எஸ்.பி.வேலுமணி வழக்கில் 10 வாரங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கடந்த 2021 நவம்பரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழகஅரசுக்கு கடிதம் எழுதியுள்ளது எனவும், இந்த அனுமதி கிடைத்ததும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu